×

நீங்க 40+ ஆ…

நன்றி குங்குமம் தோழி

உங்களுக்குதான் இது!

நாற்பது வயது ஆகிவிட்டதென்றால் உங்கள் உடல் நலனையும், மன நலனையும் இப்போதே எதிர்காலத்திற்கென தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தலைமுறை நிறைய மாற்றங்கள் கண்டுவிட்டது. தினந்தோறும் மாறுகின்ற சூழலுக்கேற்ப நம்மையும் மாற்றிக் கொள்வதுதானே மிகச்சிறந்த வழி. மாற்றம் ஒன்றே மாறாதது.

சமைக்க பழகலாம்…

ஆணோ, பெண்ணோ சமையலை முழுமையாக கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் உணவுத் தேவைகளை உங்களை தவிர வேறு யாராலும் பூர்த்தி செய்ய இயலாது. ஆண்கள் சமைக்கக்கூடாது என நினைத்தால் முதலில் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

காரணம், ஆண்களுக்குதான் கட்டாயம் சமைக்க தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில் மனைவியின் இழப்பிற்கு பிறகு இரட்டை துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும். கூட்டு குடும்பமாய் வாழ்ந்த காலங்களில் அக்கா, தங்கை, அண்ணிமார்கள் என பெண்கள் அதிக அளவில் வீட்டில் புழங்கும் காலத்தில் ஆணுக்கு சமைக்க வேண்டிய அவசியமோ தேவையோ ஏற்பட்டிருக்காது. ஆனால் இப்போது அந்த நிலை எங்குமே இல்லை. எல்லாமே நியூக்ளியர் ஃபேமிலி செட்டப். ஓட்டல் உணவுகளும் உடலுக்கு ஒத்துக்கொள்ளாது. எனக்கு சுடு தண்ணீர் கூட வைக்கத் தெரியாது என வெட்டிப் பெருமை பேசிக் கொண்டிருந்தால், வீணாய் போவீர்கள்!!!

அப்படி சமைக்கவே முடியாது தெரியாது என்கிற பட்சத்தில் நீங்கள் உங்களுக்கான பணத்தை தாராளமாய் வைத்துக்கொள்ளுங்கள். ஆள் வைத்து சமைத்துக் கொள்ளலாம். அதிலும் ஓர் சிக்கல் உண்டு. நல்ல வேலையாட்கள் கிடைப்பதெல்லாம் கடவுளுக்கே கிடைக்காத வரம். கிடைத்த ஆட்களை தக்க வைப்பது என்பது ஆகப் பெரும் சவால். அதனால் பணம் இருந்தால் மட்டும் போதாது. தன் கையே தனக்குதவி என்பது மட்டுமே கடைசிவரை கூட வரும். அப்போதுதான் உணவுக்காக மற்றவர் கையை எதிர்பார்க்க வேண்டி இருக்காது.

உடல்நலனில் கவனம்…

நாற்பது வயதிற்கு மேல் உப்போ, சர்க்கரையோ, எண்ணையோ அதிகம் சாப்பிடுவதால், நாமே வியாதிகளை வரவழைத்துக் கொள்கிறோம். ஏற்கனவே மெனோபாஸ், எலும்பு தேய்மானம் என வழக்கமான இயற்கை உபாதைகளுடன் சில போனஸ் வியாதிகள் நமக்கு வேண்டாமே. நீங்கள் வாயை கட்டாமல் கண்ட உணவுகளை சாப்பிட்டு வியாதிகளை இழுத்து விட்டுக் கொண்டால் உங்களை பார்த்துக் கொள்ள கூட தற்போதைய வேகமான உலகத்தில் ஆட்கள் கிடையாது.

தினமும் வாக்கிங் மற்றும் முறையான சிறுசிறு உடற்பயிற்சிகளை பழக்கப்படுத்தி ஆரோக்கியத்தை பேணுங்கள். உடல் எடையை கட்டுக்குள் வையுங்கள். மூட்டுவலி, முதுகுவலி வந்தால் உங்களுக்குதான் தலைவலி. பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டிலிருந்து ஒரு போன் விசாரிப்புகளோடு முடித்துக் கொள்வார்கள். உள்ளூர் என்றால் இரண்டொரு நாட்கள் மட்டுமே பார்த்துக் கொள்வார்கள். இந்த அவசர உலகில் ஆளாளுக்கு ஆயிரம் வேலைகள். உங்களை பார்த்துக் கொள்ள அவர்களுக்கு நேரமிருக்காது என்பதே யதார்த்தம்.

சேமிப்பில் கவனம்…

என்னதான் தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு வேறு தான். பிள்ளைகளுக்கு கல்வியோ, திருமணமோ, வேலையோ அவசியமான செலவுகளை செய்ய வேண்டியதுதான். அதே சமயம் உங்கள் முதுமைக் காலத்தில் தேவையான பணத்தை சேமித்துக் கொள்வதும் உங்கள் பொறுப்பே. பிற்காலத்தில் மகனோ, மகளோ, மருமகளோ, மருமகனோ உங்களுக்கு செலவு செய்ய சொல்லி சண்டையிடவோ அல்லது அவர்களிடம் கையேந்த வேண்டிய அவசியமோ தேவையோ இருக்காது. அவர்களுக்கு ஆயிரம் செலவுகள் இருக்கலாம். எக்காரணத்தை கொண்டும் இருக்கும் பணத்தை எல்லாம் பிள்ளைகளிடம் துடைத்து கொடுத்து விட்டு பின்பு அவர்களிடம் சண்டையிடாதீர்கள். அது நிலைமையை மேலும் மோசமாக்கும்.

சொல்லிக் காட்டாதீர்கள்…

எக்காலத்திலும் நாங்கள்தான் பெற்றோம், வளர்த்தோம். படிக்க வைத்தோம்… கல்யாணம் செய்து கொடுத்தோம் என புலம்பாதீர்கள். உலகத்தில் உள்ள அனைத்து பெற்றோரும் செய்வதுதான். ஏதோ ரெகரிங் டெபாசிட் போல அவர்களிடம் வட்டியை எதிர்பார்த்துக் கொண்டே இருக்காதீர்கள். அவர்கள் என்ன தவணை முறையில் திரும்ப பெறும் இன்ஷூரன்ஸ் திட்டமா? பிள்ளைகள் சலிப்படைந்து போவார்கள் தானே தவிர இதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள். உங்கள் மரியாதையை இழந்து போவீர்கள்.

எதிர்பார்க்காதீர்கள்…

பிள்ளைகளிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள். நாம் பெற்ற பிள்ளைகளே அப்படியெனில் வேறு வீட்டில் இருந்து வந்த மருமகளிடமோ, மருமகனிடமோ எதை எதிர்பார்க்க முடியும். நாங்கள் உனக்கு உடல்நலன் சரியில்லாத போது அதை செய்தோம் இதை செய்தோம் என எமோஷ்னல் ப்ளாக் மெயில் செய்யாதீர்கள். அது அவர்களை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கும். எனக்கு செய்யும் கடமை உனக்கு இருக்கிறது என சட்டம் பேசாதீர்கள்.

குறை சொல்லாதீர்கள்…

வருபவர் போவோரிடமெல்லாம் உங்கள் பிள்ளைகளை குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். அது அவர்கள் மீதான மரியாதையை மட்டுமல்ல உங்கள் மீதான மரியாதையையும் உங்கள் குடும்பத்தின் மீதான மரியாதையையும் கெடுக்கும். பிள்ளைகளும் உங்களை வெறுத்து ஒதுக்கி வைக்கக்கூடும்.

பொழுதுபோக்கு அவசியம்…

குறிப்பிட்ட வயதுக்கு மேல் நீங்கள் பேசுவதை கணவனோ/ மனைவியோ கூட முழுமையாக கேட்க மாட்டார்கள். அப்படி இருக்கும் போது பிள்ளைகளோ, பேரப் பிள்ளைகளோ நம் பேச்சை கேட்கப் போவதேயில்லை என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள். காலம் இருக்கும் போதே வேலை நேரம் போக ஏதேனும் ஒரு கலையை கற்றுக் கொள்ளுங்கள். அல்லது உங்களுக்கு ஆர்வமான விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். பொழுதுபோக்கினை அறியாதவர்கள் பிற்காலத்தில் தனிமைப்பட்டு செய்வதறியாது திகைத்துப் போவார்கள். உங்களிடம் பேசவோ பொழுதை போக்கிக் கொள்ளவோ யாருக்கும் நேரமிருக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள்…

நல்ல நிலையில் இருக்கும் போதே உறவினர்களையும், நண்பர்களையும் அரவணைத்து செல்லுங்கள். இளமையில் யாரையும் அண்ட விடாமல் துரத்தியடித்து பிறகு முதுமையில் அழைத்தால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஒரு ஆரோக்கியமான இடைவெளியோடு நட்புகளையும், உறவுகளையும் பேணுங்கள். உங்கள் வயதொத்த நண்பர்களே உங்களை மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

பேக்கேஜ்களுடன் அலையாதீர்கள்…

உங்கள் துணைகளின் மீதான வாழ்நாள் குற்றம் குறைகளை பேக்கேஜில் சுமந்து வைத்துக் கொண்டு அலையாதீர்கள். வயதான காலத்தில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நிம்மதியை கெடுத்துக் கொள்ளாதீர்கள். நோயுற்ற காலங்களில் ஒருவருக்கொருவர் ஆறுதலாக உதவியாக இருங்கள். உங்களோடு கடைசி வரை இருக்கப் போவது அவர்கள் மட்டும்தானே. எங்களை பார்த்துக்கொள்வது பிள்ளைகளின் கடமைதானே. அவர்கள் எவ்வாறு பொறுப்பை தட்டிக் கழிக்கலாம். என் மகன் அல்லது மகள் அப்படி கிடையாது அவர்களை நான் அப்படி வளர்க்கவில்லை என்று பேச வேண்டாம். அதிலிருந்து வெளியே வாருங்கள்.

தொகுப்பு: தனுஜா

The post நீங்க 40+ ஆ… appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வீட்டை இப்படி சுத்தம் செய்யலாம்!